Ads (728x90)

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம். எனவே பயங்கரவாதிகளின் பொறியில் விழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் இன்று மகிழ்ச்சியாகவே முல்லைத்தீவிற்கு வந்தேன். எனக்கு முன்னதாக 5 நிறைவேற்று ஜனாதிபதிகள் இருந்தனர். நான் 6வது ஜனாதிபதி. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகள் எனக்களித்தனர். அதை நான் மறக்க மாட்டேன். அதற்கு எனது நன்றிகள்.

நாம் மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிரிந்துள்ளோம். நாம் ஒன்றாக இல்லை. இது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பிரதான சவால். இதனால்தான் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.

இந்த மாவட்டத்தின் சனத்தொகை 1,25,000 இற்கும் குறைவானது. நாங்கள் இம்மாவட்டத்திலே 1178 வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 1800 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 1178 வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம். இந்த வேலைத்திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவராவது இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 68,000 குடும்பங்கள் இந்த திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.

இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. இனவாதத்தை தூண்டி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள். தவறாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. உல்லாச பயணத்துறை அதளபாதாளத்திற்கு விழுந்துள்ளது. இனங்களிற்கிடையில் பிளவு அதிகரித்துள்ளது. அதனால் பயங்கரவாதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது. அவர்கள் நாட்டை பிரிப்பதற்காகத்தான் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இங்குள்ள வளங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் எனக்கு கூடுதல் விருப்பம் உள்ளது. அது ஏன் தெரியுமா? இலங்கையில் காடு அடர்த்தியான மாவட்டம் முல்லைத்தீவுதான். அதை நீங்கள்தான் பாதுகாத்தீர்கள்.

நிகழ்வில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரமும், 1100 பேருக்கு காணி உரிம பத்திரமும், 13,643 குடும்பங்களிற்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget