ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
இச்சந்திப்பில் பங்கேற்குமாறு அமைச்சர் மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.
ஜனாதிபதியுடன் யார் சந்திப்பை ஒழுங்குபடுத்தினாலும், சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தாலோ, ஜனாதிபதியிடமிருந்தோ கிடைக்கவில்லை.
கிண்ணியா விவகாரம் தொடர்பில் பேசப்பட இருந்ததால், அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொள்ள வேண்டும்.
அவரைத் தொடர்புகொண்டு, கூட்டத்துக்கான அழைப்பு கிடைத்ததா என்று கேட்டேன். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
ஜனாதிபதியை இந்த விவகாரங்கள் தொடர்பில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். எனவே அவரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment