Ads (728x90)

ஆயுத பலம் இல்லாத நிலையில் தமிழர்களை ஏமாற்றலாமென அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய போது இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தன்னாட்சி உரிமையுடன் வாழ வேண்டுமென இந்த கட்சி தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டது. அவரது வழியில் நீண்டதூரம் பயணித்து விட்டோம். ஆனால் இன்னும் இலக்கை எட்டவில்லை. உரிய நேரத்தில் உரிய காலத்தில சந்தர்ப்பங்கள் வரும்போது அதை நாம் பயன்படுத்தா விட்டால், விளைவுகள் பாரதூரமானதாக இருக்கலாம்.

13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரேமதாசா, சந்திரிகா, மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை. அது செய்யப்பட வேண்டும்.

இந்த நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கணிசமான முன்னேற்றங்களை கண்டது. அதுவும் தற்போது மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. ஆட்சி தலைவர்கள் தாங்கள் விரும்புகின்ற சில விடயங்களை நிறைவேற்ற அரசியல் தீர்வு, அதிகார பரவலாக்கலை தாமதப்படுத்துகிறார்கள்.

கிழக்கிலும் தற்போது வடக்கிலும் குடியேற்றங்கள் நடந்து வருகிறது. அங்குள்ள சனப்பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் பல்வேறு வழிகளில் குடியேற்றங்கள் நடக்கின்றன.

எனவே எதிர்வரும் மாதங்களில் இந்த கருமங்களை நிறைவேற்றக் கூடியவகையில் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget