Ads (728x90)

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

முறையாகவும் வினைத்திறனாகவும் அதற்கான செயற்பாடுளை மேற்கொண்டு சுற்றுலாத்துறை வர்த்தகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் வர்த்தக சமூகத்தினர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, குறித்த அமைச்சரவை உப குழுவிலும், அமைச்சரவையிலும் கலந்துரையாடி தேவையான நிவாரண வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget