Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய மக்களுக்கு அசம்பாவிதங்கள் உண்டாகாது என யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார்.

இந்து சமய மக்களுக்கும், பெளத்த சமய மக்களுக்கும் இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்து சமய மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அநாகரிகமான செயற்பாடுகள் பெளத்த மதத்தின் நிலைப்பாடாகாது. அவர்கள் பிக்குகளா என்ற சந்தேகமும் எமக்கு எழுவதுண்டு.

பெளத்த மதத்திற்கும், இந்து மதத்திற்கும் தலைமை இல்லை. தர்மம் தான் இரு மதங்களுக்குமே தலமை. மேலும் இந்த இரு சமயங்களுக்குமிடையில் பிரிவுகள் இல்லை. இந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது. பெளத்த சமயத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமய கடவுள்களே இருக்கின்றனர். எந்த விகாரைக்கு சென்றாலும் இந்து சமய கடவுள்களை பார்க்கலாம். இந்நிலையில் இந்த இரு சமயங்களுக்குமிடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது.

அதற்கு ஒரு சில பெளத்த பிக்குகளே காரணம். அந்த ஒரு சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் பெளத்த சமயத்தின் நிலைப்பாடாக அமையாது. அது பெளத்த சமயத்தின் நிலைப்பாடல்ல.

பெளத்த பீடங்களுக்குள் உள்ள பிரச்சினைகளினால் சில பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் இந்து சமயத்திற்கு பங்கம் உண்டாக்குவதாக அமைந்துள்ளது. இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பெளத்த பிக்குகள் தானா? என்ற சந்தேகம் எழுகிறது.

நாக விகாரை வடக்கு-தெற்கு மக்களுக்கிடையிலான உறவு பாலமாக அமைந்துள்ளது. அந்தவகையில் இந்து பெளத்த மக்களிடையில் நல்லிணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பை நாம் எடுப்போம். மேலும் யாழ்.மாவட்டத்தில் பெளத்த சமயத்தின் பெயரால் இந்து சமய பங்கம் விளைவிக்கப்படாது அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதனை எதிர்க்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.

இந்து சமயத்தை பெளத்தர்களும், பெளத்த சமயத்தை இந்துக்களும் பாதுகாக்க வேண்டும். அதேபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையினை பெளத்த சமயத்தின் மீதும் வைக்க வேண்டும். அதுவே இரு சமயங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்றும் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget