யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்தளவாக காணப்பட்டது. ஆனால் அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான நிதியினை ஒதுக்கிய அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த கால யுத்தத்தினால் இப்பிரதேசம் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகள் தடைப்பட்டன. இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தியினால் இன்று இந்த பாடசாலை சிறந்ததொரு நிலைக்கு மாறியுள்ளது.
நாட்டில் இலவச கல்வியின் நோக்கத்தினை கடந்த 2015ஆம் ஆண்டுவரை அடைந்து கொள்ள முடியாத துரதிஷ்ட நிலை காணப்பட்டது. அதன் பிற்பாடு கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்து சென்று 13 வருடம் கட்டாயக் கல்வியினை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இக்கற்றலின் பின்னர் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல விரும்பும் மாணர்களுக்கு அத்துறையில் பயிற்சிகளும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
கடந்த 4 வருடங்களில் 21 பல்கலைக்கழக உயர் பீடங்களை உருவாக்கியுள்ளோம். அதே போன்று 100 இற்கும் மேற்பட்ட மாணவ விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன ."அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற கருத்திட்டத்திற்கு அமைய பாடசாலைகள் பெயரிடப்பட்டு அதற்கான உபகரணங்களும் வளங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று கல்விக்காக இன்னும் அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது. அடுத்துவரும் 5 வருடம் கல்வியில் மாற்றங்களை கொண்டுவரும் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன என மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment