Ads (728x90)

தமிழ் மக்களின் வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் ஒதுக்கிவைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு சஜித் பிரேமதாசவுக்கு பெருமளவு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள். தங்கள் ஆட்சியில் தமிழர்களை எப்படி நோக்குவீர்கள் என ஊடகவியலாளர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு மஹிந்த ராஜபக்சவை சந்தித்து வினவியுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களும் இலங்கையின் பிரஜைகள் தான். அவர்களை வடக்குத் தமிழர் என்றோ அல்லது கிழக்குத் தமிழர் என்றோ அல்லது தெற்குத் தமிழர் என்றோ நாம் வேறுபடுத்திக் காட்ட முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். புதிய ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியேற்பு நிகழ்வில் பகிரங்கமாகவே இதனை ஒத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகள் எமது கட்சிக்குப் பெருமளவில் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களை நாம் ஒதுக்கிவைக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டில் தலைமிர்ந்து வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களை வெல்லும் வகையில் நாம் செயற்படுவோம். எமது புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் மனநிலையை நன்கு அறிந்தவர். அதற்கேற்ற மாதிரி அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பார் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget