Ads (728x90)

இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும்.
அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும் என இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை நேற்று முற்பகல் புதுடில்லியில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானம், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, வடக்கு, கிழக்கில் இந்திய நிதியுதவியில் தமிழ் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், திருகோணமலை எண்ணெய் கிடங்கு விவகாரம், தமிழர் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை கோட்டாபயவிடம் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார்.

அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே காணப்படும் நீண்டகால நட்புறவு இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் ஊடாக மேலும் பலப்படும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையில் புதிய அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget