Ads (728x90)

21ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீர் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கில் நக்கில்ஸ் மலைத்தொடரின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை இடைமறித்து லக்கல, பல்லேகம  பிரதேசத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும்.

களுகங்கை பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்கப்படுவதுடன், பழைய ஹத்தொட்ட கால்வாயினால் நீரைக் கொண்டு சென்று அபிவிருத்தி செய்யப்பட்ட சுமார் 2,000 ஏக்கர் அளவிலான காணியில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்வதற்கான நீரும் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மேலதிக நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக 9 கிலோமீற்றர் நீளமான சுரங்க கால்வாய் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இக்கால்வாயினூடாக களுகங்கை நீர்த்தேக்கத்தில் நிரம்பும் நீரானது செக்கனுக்கு 35 கனமீற்றர் வேகத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டதனால் மொரகஹகந்த - களுகங்கை செயற்திட்டத்தின் மேல் எலஹெர கால்வாயினூடாக மஹாகனதராவ வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் பழைய அம்பன் கங்கை, யோத கால்வாய் ஊடாக மின்னேரியா, கிரித்தலை, கவுடுல்ல, கந்தளாய் வரை கொண்டு செல்லப்படும் நீரின் அளவும் அதிகரிப்பதனால் அப்பிரதேச விவசாயம் மேலும் வளர்ச்சியடையும்.

அது மட்டுமன்றி பழைய அம்பன் கங்கையின் ஊடாக போவத்தென்ன நீர்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த எலஹெர கால்வாய் பிரதேசத்திற்கு செல்லும் நீர் வடமேல் மாகாணத்தில் உள்ள 40,000 குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும் ஏனைய குடிநீர் மற்றும் கைத்தொழிலுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கும் ஏற்றவாறு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இதனை தொடர்ந்து மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய அம்பன நகரம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அம்பன, நாவுல பிரதேசத்தை சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் தமக்கான சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்வதற்காக கோன்கஹவெல பழைய பிரதேச மருத்துவமனைக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனை, கமநலசேவைகள் நிலையம், சமூர்த்தி அலுவலகம், பொலிஸ் காவலரண், தபால் அலுவலகம், நிலசெவன சேவை நிலையம், வாராந்த சந்தைக் கட்டிடம், வனப் பாதுகாப்பு அலுவலகம், லக்கல, குருவெல பிரதேச வன ஜீவராசிகள் அலுவலகம் மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டியதாக கண்கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதி ஆகியவற்றையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget