Ads (728x90)

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் பின்வரும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் திகதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.

எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

தாய், தந்தையின் நல்லாசியுடன் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும். பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

இரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

Post a Comment

Recent News

Recent Posts Widget