யாழ்.குடாநாட்டில் பெய்த அடை மழை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வருடம் இதுவரை யாழ். மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 854 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதுடன், கடந்த ஒக்டோபர் மாதம் 537 பேரும் இம்மாதம் நடுப்பகுதிவரை 1020 பேர் இனம் காணப்பட்டனர்.
டெங்கு நோய் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் டெங்கு நோய் முன்னெச்சரிக்கை தொடர்பில் சகல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியாவிலும் டெங்கு நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் 305 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்களும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இது வரையில் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Post a Comment