Ads (728x90)

எமது வேண்டுகோளுக்கமைய தமிழ் மக்கள் ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து இலங்கை ஆட்சியாளருக்கும், பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஓர் உறுதியான செய்தியைக் கூறியிருக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது. கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலை மிக நேர்த்தியாக நடத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையின் வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.

எமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது.

அதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

புதிய குடியரசுத் தலைவர் தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும், நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும், அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.




Post a Comment

Recent News

Recent Posts Widget