சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ், பாம்புகளிலிருந்து பரவியிருக்க அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புகளில் இருக்கும் அணுக்களை ஒத்த அணுக்களே இந்த வைரஸிலும் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது இதுவே முதன்முறை என சீன ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்பதுடன், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்துத் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 830 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மாத்திரமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், வியட்னாம், ஜப்பான், தாய்லாந்து, தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் 14 வைத்தியர்களால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், வைரஸ் பரவும் அச்சம் காரணமாக ரயில், விமான சேவைகள், சுரங்கப்பாதை போக்குவரத்து என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை காணப்பட்டதுடன், இதன்போது ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட 8,098 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 774 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment