2016 ஒலிம்பிக் போட்டிகளில் ஈரானிற்காக டேக்வண்டோ போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 21 வயது அலிசடேயே ஈரானிலிருந்து வெளியேறியுள்ளார். ஈரானிற்காக ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கபட்டு வரும் மில்லியன் கணக்கான பெண்களில் நானும் ஒரு பெண் என குறிப்பிட்டுள்ள கிமியா அலிசடே அவர்கள் எங்கள் வாழ்க்கையுடன் பல வருடங்களாக விளையாடுகின்றனர் என தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டகிராம் பதிவில் ஈரானிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கெல்லாம் என்னை கொண்டு சென்றார்கள், நான் அவர்கள் விரும்பிய ஆடைகளையெல்லாம் அணிந்தேன், அவர்கள் நான் தெரிவிக்கவேண்டுமென உத்தரவிட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நான் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள அவர், தங்களிற்கு அவசியமான பொருத்தமான சந்தர்பங்களில் எல்லாம் ஈரானிய அரசாங்கம் தன்னை பயன்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை பொறுத்தவரை நான் முக்கியமானவளில்லை, நாங்கள் அவர்களிற்கு முக்கியமானவர்கள் இல்லை, அவர்களை பொறுத்தவரை நாங்கள் வெறும் சாதனங்களே என இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ள அலிசடே ஈரான் அரசாங்கம் நான் பெற்ற பதக்கங்களை கொண்டாடியவேளை எனது விளையாட்டை விமர்சித்தது, ஒரு பெண் தனது கால்களை அகலவிரிக்ககூடாது என்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாசங்குத்தனம், பொய், அநீதி மற்றும் முகஸ்துதி ஆகியவற்றின் மேசையில் நான் அமர்ந்திருக்க விரும்பவில்லை, ஈரானின் ஊழல் மற்றும் பொய் நிரம்பிய ஆட்சியாளர்களுடன் தான் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை எனவும் கிமியா அலிசடே தெரிவித்துள்ளார்.
Post a Comment