ரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசியலமைப்பின்படி அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது. ஏற்கனவே தொடர்ந்து இரு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்த விளாடிமிர் புட்டின் ஒருமுறை அந்நாட்டு பிரதமராக இருந்த பின்பு மீண்டும் அதிபரானார்.
இந்த முறையும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளது என்பதால் 2024ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில், ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.
2000 ஆம் ஆண்டு முதல் விளாடிமிர் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment