கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பெரும்பாலான நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகளில் கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தால் அந்தந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பெரும் பாதிப்படைந்துள்ளது. இதில் அதிக வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத்துறையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை வருமானத்தையே பெரும்பகுதி நம்பியிருக்கும் நாடுகளில் கொரோனாவால் மிக மோசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுவரை உலக அளவில் கொரோனாவில் 2.37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 08 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த பூமியில் வசிக்கும் மக்களில் ஒவ்வொரு 10 பேருக்கும் வாழ்வாதாரத்தை அளிப்பது சுற்றுலாத்துறை. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு நாடுகளின் கலாச்சாரம், நாகரிகம், உணவு முறை, பழக்கங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யவும், உலக மக்களை ஒருவரோடு ஒருவராக நெருக்கமாகப் பழகச் செய்யவும் சுற்றுலாத் துறைதான் காரணமாக இருக்கிறது.
ஆனால் இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றால், உலக சுற்றுலாத் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்றவை முடங்கியதால், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் பல்வேறு நாடுகளுக்கு பயணிகள் செல்வதைத் தவிர்த்து விட்டனர். இதனால் அந்தந்த நாடுகளில் வருவாய் வழக்கமானதை விட பாதியாகக் குறைந்து விட்டது.
அதிலும் பணக்கார நாடுகளுக்கு சுற்றுலாத்துறை பாதிப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் வளர்ந்துவரும் நாடுகளுக்கு, குறிப்பாக சிறிய தீவுகள், ஆபிரிக்க நாடுகளுக்கு இது அவசரக் காலம். சுற்றுலா வருவாய் என்பது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகக் கூட இருந்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை உலகச் சுற்றுலாவில் 32,000 கோடி டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் 1.20 இலட்சம் கோடி டொலராக சுற்றுலா வருமானம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்ட நிலையில், அது 91,000 கோடி டொலராகக் குறையும் என எதிர்பார்க்கிறோம்.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியும் 2.8 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறையும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டரெஸ் ஐ.நா கொள்கை விளக்கக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment