Ads (728x90)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாகவும், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாவதாகவும், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாவதாகவும் யாழ். பல்கலைக்கழகப் பேரவையால் புள்ளிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இடம்பெற்ற மதிப்பீடுகளின் நிறைவில் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா 82 புள்ளிகளையும், பேராசிரியர் கு.மிகுந்தன் 72 புள்ளிகளையும், பேராசிரியர் ரி.வேல்நம்பி 71 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.

மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ், 61 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும், முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல்துறை முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், 51 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தையும் பெற்றிருந்தனர்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget