Ads (728x90)

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை அமோனியம் நைத்ரேட் களஞ்சிய வெடிப்புச் சம்பவங்கள் உலுக்கி எடுத்திருக்கின்றன. நேற்று பிற்பகல் நகரின் துறைமுகப்பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிப்புகளினால் பரந்த அளவில் மிகப் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும், பல உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. வெடிப்பினால் பெரும் தீ பரவி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகப்பகுதியில் இருந்து கரும் புகைமண்டலம் அடர்ந்து பரவி மேலெழுகின்ற காட்சிகளை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன.

பொதுவாக குண்டு வீச்சுகளுக்குப் பழக்கப்பட்ட பெய்ரூட் நகர வாசிகள் இன்றைய வெடிப்பை பெரும் பூகம்பம் என்று வர்ணிக்கின்றனர். வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. வெடிப்புகள் ஏற்படுத்திய பேரதிர்வுகள் தலைநகரின் பரந்த பிரதேசத்தில் கட்டடங்களை உலுக்கியது. கட்டடப் பாகங்களும் கண்ணாடிகளும் சிதறி பல மைல்கள் தூரம் பறந்து நூற்றுக்கணக்கானவர்களைத் தாக்கிக் காயமடையச் செய்துள்ளன.

நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகையையும் அதிர்வுகள் சேதப்படுத்தி உள்ளன. துறைமுகத்தில் தரித்து நின்ற ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் கப்பல் ஒன்று இந்த வெடிப்பினால் சேதமடைந்துள்ளது. அதில் கடமையில் இருந்த அமைதிப்படையினர் பலரும் காயமடைந்துள்ளனர் என்பதை ஐ. நா. உறுதிப்படுத்தி உள்ளது.

இதேவேளை இந்த அனர்த்தத்தில் சுமார் மூவாயிரத்து 700 பேர் காயமடைந்திருப்பதை அரசுத் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிறைந்து விட்டன என்று கூறுகின்றனர்.

தீயணைப்பு மற்றும் அத்தியாவசிய அம்புலன்ஸ் சேவைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எல்லா இரத்த வகைகளும் மிக அவசரமாகத் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் மக்களிடம் உதவி கேட்டிருக்கிறது.

இதேவேளை தலைநகரில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் ரோந்துக்கு அழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச்சபையின் அவசர கூட்டத்தை பிரதமர் கூட்டியிருக்கிறார்.

மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கும் இந்த வெடிப்புகளில் லெபனானின் எதிரி நாடான இஸ்ரேலுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்ற ஊகங்களை அந்த நாடு மறுத்திருக்கிறது. இஸ்ரேலின் மறுப்பை வெளியிட்டி ருக்கும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் காபி அஷ்கெனாஷி, இது ஒரு விபத்து என்பதை நம்புவதற்கு சான்றுகள் இல்லை என்று கூறியிருக்கிறார்.

துறைமுகப்பகுதியில் தொன் கணக்கில் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் (Ammonium nitrate) இரசாயனப் பொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அதுவே இந்தப் பெரு வெடிப்புகளுக்கான காரணம் என்றும் அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பின் அதிர்வுகள் லெபனானில் இருந்து சுமார் 250 கிலோ மீற்றர்கள் தொலைவில் மத்தியதரைக்கடலின் கிழக்கே அமைந்துள்ள சைப்பிரஸ் நாட்டையும் உலுக்கியுள்ளன என்று மத்திய கடல் பகுதிக்கான ஐரோப்பிய பூகம்ப ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.

பிரெஞ்சு அதிபர் மக்ரோன் லெபனான் தலைவர்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாடி இருக்கிறார். அவசர உதவிகள் அங்கு விரைந்து அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று எலிஸே மாளிகை தெரிவித்திருக்கிறது. பெய்ரூட் நிலவரத்தை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெள்ளை மாளிகையும் அறிவித்திருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget