Ads (728x90)

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக மாலியில் பெரும் போரட்டம் நடந்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து தேசிய தொலைக்காட்சியில் சுருக்கமாக உரையாற்றிய ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர், “இராணுவத்தின் சில பிரிவுகள் தலையீடு அவசியம் என்று முடிவு செய்துள்ளன. எனக்கு உண்மையில் ஒரு தேர்வு இருக்கிறதா? ஏனென்றால் இரத்தம் சிந்தப்படுவதை நான் விரும்பவில்லை. இனிமேல் என் கடமையை கைவிட முடிவு செய்துள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

“மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவை இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளதுடன், அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு அதிகார மாற்றத்திற்கும் எதிராக எச்சரித்துள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget