ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 33 (2) இல் உள்ள விதிகளின்படி ஜனாதிபதி அரசின் கொள்கை அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றுவார். நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தரும் ஜனாதிபதியை வரவேற்க அனைத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற சம்பிரதாய அமர்விற்கு முன்னதாக காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும். காலை முதல் அமர்வின் போது நிலையியல் கட்டளையின் இலக்கம் 1 இன்படி புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். பின்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் முன் உறுதிமொழியை எடுப்பார்கள்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி தெரிவான உறுப்பினர் ஒருவர் அதிகாரப்பூர்வ மொழிகளான தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவதொரு மொழியில் சத்தியப்பிரமாணம் செய்யலாம்.
இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் நியமனம் செய்யப்படுவர்.
இன்று 81 உறுப்பினர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதில் தேர்தல் மூலம் 65 பேர் தெரிவாகியுள்ளனர். ஏனையவர்கள் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.
இலங்கை பொதுஜன பெரமுனவிலிருந்து 54 பேர் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 4 பேர் முதன்முறையாக தெரிவாகியுள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன 145 இடங்களைப் பெற்றுள்ளது. 54 ஆசனங்களை பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும்.
புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா பதவிகளுக்கான பெயர்கள் இன்னும் முன்மொழியப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment