யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று யாழ்.மாவட்டச் செயராளர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு மாவட்ட விவசாய அமைப்புக்களினால் வலியுறுத்தப்பட்டது.
விவசாய அமைச்சர் இதனை உடனடியாக நிறுத்துமாறும், ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.
விவசாய அமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று மாவட்டச் செயராளர் க. மகேசன் தெரிவித்தார்.

Post a Comment