நேற்றைய தினம் வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் 46 நாட்களில் 56 லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் என அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகி நவம்பர் 03 ஆம் திகதி வரை குறித்த லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இத்தொடரில் 08 அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் கடந்த முறை சம்பியனான மும்பாய் இந்தியன்ஸ் அணியும், அதற்கு முந்தைய தொடரில் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அபுதாபியில் மோதுகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐபிஎல் தொடரை நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்ததோடு, கொரோனா பரவல் தொடர்பில் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் அது அமுல்படுத்தியுள்ளது.
குறித்த அட்டவணையின் அடிப்படையில், சனி, ஞாயிறு நாட்களில் மாத்திரம் தலா இரண்டு போட்டிகளும் ஏனைய நாட்களில் தலா ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.போட்டிகள் பிற்பகல் 3.30 (அமீரக நேரம் 02 மணி) இரவு 7.30 மணிக்கும் (அமீரக நேரம் 06 மணி) ஆரம்பமாகின்றன.
துபாயில் 24 போட்டிகள், அபுதாபியில் 20 போட்டிகள், சார்ஜாவில் 12 போட்டிகள் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் 03 மைதானங்களில் மொத்தமாக 56 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஏனைய 07 அணிகளுடன் இரண்டு முறை மோதவுள்ளன. வெற்றி பெறும் அணிகள் பெறும் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி இடம்பெறும்.

Post a Comment