இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14% வீத வருமான வரி மற்றும் 15% வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15% வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக நீக்கி, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமை, அவை சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
தங்க நகைகளை உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4% வீத சலுகை வட்டி அடிப்படையில் 10 லட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக் கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment