20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. இத்திருத்த வரைபிலுள்ள விசேட அம்சங்களாவன:
20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற பேரவையில் 5 அங்கத்தவர்கள் மாத்திரம். சிவில் பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளது. (பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி, எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி)
சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் மற்றும் சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புப் பேரவைக்கு முன்னைய அரசியலமைப்பு திருத்தத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மூவர் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், புதிய வரைபில் சிவில் பிரதிநிதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் திருத்தப்பட்டு, அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவும், கொள்கை வகுப்பு ஆணைக்குழுவும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசியலமைப்பில் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. ஆனால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.
இதேவேளை பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறையும், 40 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சகர்களின் எண்ணிக்கை வரம்பும் 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள், பாராளுமன்றத்தின் பதவிக் காலம், தகவலறியும் உரிமைச் சட்டம் ஆகியன தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட குறித்த திருத்தம், நேற்றைய தினமே வர்த்தமானிப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. தற்போது அதன் பிரதி அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment