அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு பெற்றுக்கொடுப்பது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் எதிர்பார்ப்பாகும். வீடொன்றின் தேவை இருந்தாலும் அதனை தனியாக நிறைவு செய்துகொள்ள முடியாமை பெரும்பாலனவர்களுக்கு உள்ள பிரச்சினையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக குறைந்த வருமானமுடையவர்களுக்கு 14,022 வீடுகளை நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களில் 70,100 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 05ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக குடியிருப்பு தினத்திற்கு இணையாக சிறந்த தொடர்மாடி வீட்டு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெரெல்லவத்த, மிஹிந்துபுர, பறங்கியா கும்புர, தஹய்யாகம, மத்தேகொட, சொய்சாபுர மற்றும் தங்கல்ல நகரை மையப்படுத்திய வகையில் 1,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இந்திக்க அனுருத்த மேலும் குறிப்பிட்டார்.
அனைத்து நிர்மாணப் பணிகளுக்கும் அரச, தனியார் இருதரப்பினரையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வீட்டை கொள்வனவு செய்வதற்கு 6.25 வீத வருடாந்த வட்டி வீதத்தில் 30 வருட காலத்திற்குள் செலுத்தும் வகையில் அரச வங்கி மூலம் கடன் வழங்குவதற்கு பொறி முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய வகுப்பினரின் வருமானத்திற்கு ஏற்ற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணிகள் அமைச்சுக்கு இலவசமாக வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

Post a Comment