Ads (728x90)

குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசின் பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமான மட்டத்திலுள்ள தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வித கல்வித்தகைமையும் இல்லாத அல்லது கல்வி பொது தராதர சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி தரத்தை கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டத்திற்கு 18 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியிருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். இதேவேளை வயது முதிர்ந்த நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் விண்ணப்பதாரி விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

06 மாதங்களுக்கு தொடர் பயிற்சி காலத்தில் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அல்லது அண்மித்த பகுதிகளில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

10 வருட காலம் சிறப்பான தொடர் சேவைக் காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பெறுவோர் எந்தவொரு தரப்பினருக்கும் இலஞ்சம் வழங்குதல் தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget