Ads (728x90)

மக்கள் பயன்படுத்தும் சர்ச்சைகளற்ற காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் முறையான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தாம் விஜயம் செய்த போது பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மக்கள் காணி உறுதிப்பத்திரம் இன்மையே தங்களின் பிரதான பிரச்சினை என அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காணி முகாமைத்துவம், அரச காணி மற்றும் சொத்துக்களுக்கான அபிவிருத்திக்குரிய இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்கள் மற்றும் பயிர்செய்கை மேற்கொள்ளும் இடங்களுக்கு உறுதிப்பத்திரம் இன்மையால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க நாட்டிற்கும் பொருளாதார கொள்கைக்கும் ஏற்ற விதத்தில் காணி கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளில் பயிர்செய்கை மேற்கொள்ளாத இடங்களில் உரிய செய்கையை மேற்கொள்வது முக்கியமானதாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget