Ads (728x90)

2015-2019 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பில் ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் அரச சேவையில் நிர்வாக ரீதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான 6,952 பேர் இதுவரை இக்குழுவில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

அதில் 1,152 பேரின் மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகள், அவதானிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2015-2019 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ள விதம், குழுவில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் குறித்து குழு உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கினர்.

அரசியல் ரீதியில் பழிவாங்கல்களுக்கு உள்ளான அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவது இக்குழுவின் கடமையாகும் என்றும், நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்படும் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி அந்தந்த துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர், குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குழுவினால் இதுவரை 1152 மேன்முறையீடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 484 அவதானிப்பு கோப்புகள் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணைக்காக குழுவிற்கு அழைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் எண்ணிக்கை 372 ஆகும்.

குழுவின் தலைவராக இதற்கு முன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கடமையாற்றியிருந்ததுடன், உறுப்பினர்களாக ஆரியரத்ன அருமப்பெரும, மஹிந்த செனவிரத்ன ஆகியோர் செயற்பட்டனர்.

.

Post a Comment

Recent News

Recent Posts Widget