Ads (728x90)

எரிபொருளை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் போது, இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பலின் தீ பரவலானது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும், இந்திய கடலோர காவல்படையினரும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் கப்பலில் உள்ள உஷ்ண நிலமை காரணமாக மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளமையினால் தொடர்ச்சியான குளிரூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணியாளர்களுக்கு விபத்துக்குப் பின்னர் முதல் தடவையாக, தங்கள் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தேவையான வசதிகளை வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் ஐந்து கப்பல்கள், இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல், ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக்படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டக் படகு மற்றும் ஓஷன் பிலிஷ் டக் படகு இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு தீவிரமாக பங்களிப்பு செய்து வருகிறது.

மேலும் இலங்கை கடற்படையின் மூன்று துரித தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இந்த நடவடிக்கைக்கு விநியோக கப்பல்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஒரு டோர்னியர் விமானம் இன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது உள்ள கடல் பகுதியை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

நிபுணர் ஆலோசனைகளின் படி மேற்கொள்ளப்படுகின்ற, இந்த கூட்டு பேரழிவு நிவாரண நடவடிக்கை மூலம் கப்பலின் தீ பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதுடன் இந்த கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget