அண்மையில் திருகோணமலையிலுள்ள திரியாய் என்ற இடத்தில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை குறித்த காணிக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அச்சுறுத்தியமையை பாராளுமன்றத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற இடைக்கால கணக்கு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு விக்னேஸ்வரன் உரையாற்றும்போது அவர் தெரிவித்ததாவது;
மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
திரியாயில் தமிழ் மக்கள் விவசாயம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட இடங்களில் இருப்பதாக கூறப்படும் தொல்பொருள் ஆராய்விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா? சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா? என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன் அதனால் தான் வரலாறு தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு வரலாற்று ஆய்வாளர்களை கொண்ட ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக கூறினார்.
இவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டுமே ஒழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்து வரக்கூடாது. ஆகவே தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் வெளிநாட்டு தென்னாசிய வரலாற்று வல்லுநர்களைச் சேர்த்து ஆணைக்குழுவொன்றை கூட்டி சிங்கள மொழி பேசுவோர் பற்றிய முழுவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளேன். பௌத்தர்கள் என்றவுடன் அவர்கள் சிங்களவர்களே என்று எண்ணுவது மடமை என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் கூறியுள்ளார்.
Post a Comment