மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும், தமிழர் பாரம்பரியக் காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும், இன்று மட்டக்களப்பு பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
“இன நல்லுறவுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”, “அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”, “பொலிஸார் கடமையைச் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தபட்ட காணி முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான 09 ஏக்கர் வயல் காணியை, 1964 ஆம் ஆண்டில் அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கிய நிலையில் அவர்களால் அன்று முதல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மட்டக்களப்பு மங்களாராமய விஹாராதிபதி அம்பிட்டி சுமணரத்தன தேரர் அந்தப் பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள், பௌத்த விகாரை இருந்ததாககக் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்.
இந்த விவகாரத்திற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவ்விடத்துக்குச் சென்ற தேரர், இங்கு “விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது. காணிக்கு உரிமை கோருவோர், விவசாயம் செய்பவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்” என அச்சுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் பற்றிப் பேசச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ள தேரர், அவ்விடத்திலுள்ள தகரக் கொட்டில் ஒன்றுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
இத்தேரர் மேற்கொள்ளும் அத்துமீறல்களைக் கண்டித்தும், அதிகாரிகளைத் தாக்கியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியுமே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment