Ads (728x90)

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.

"என் தந்தை பிரணாப் முகர்ஜி மரணித்துவிட்டார். ஆர்.ஆர் மருத்துவமனையின் டாக்டர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ளவர்களிடமிருந்து பிரார்த்தனைகள், துவாக்கள், வேண்டுதல்கள் ஆகியவற்றையும் தாண்டி அவர் காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விற்றரில் அறிவித்துள்ளார்.

சிரேஷ்ட அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜி அண்மையில் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவரது மூளையில் இரத்தம் உறைந்த கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்து, செயற்கை சுவாசத்தின் ஆதாரத்துடன் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களைக் கடந்த தாகும். அதில் அவர் இந்திய ஜனாதிபதியாக தெரிவானது அவர் கண்ட உச்ச பதவியாகும். அவர் 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார். ஆயினும் அவர் இந்தியாவின் ஜனாதிபதி எனும் நிலையை அடைவதற்கு முன்பே இந்திய அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தவர்.

அவர் 2009 - 2012 காலப்பகுதியில் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 2004 - 2006 காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராகவும், 2006 - 2009 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ஜனாதிபதியாக தனது கடமையைத் தொடர்ந்தார்.

பிரணாப் முகர்ஜி, 2008 இல் பத்ம விபூஷண் மற்றும் 2019 இல் பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget