நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களாவர். இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,238 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 1,845 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடந் 04 ஆம் திகதி கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இதுவரை 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.
வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை தொற்றுடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.
அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,380 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Post a Comment