Ads (728x90)


அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20வது திருத்தச்சட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் 156 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தும், 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

இலங்கை சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உருமயா உள்ளிட்ட ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனவின் அனைத்து பங்காளிக்கட்சிகளும் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய வாக்களிப்பின்போது சமூகமளித்திருக்கவில்லை.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டயானா கமகே, எம்.எஸ்.தௌபீக், மொஹமட் ஹரீஸ், இஷாக் ரஹ்மான், அரவிந்தகுமார், பைசர் காசிம், நசீர் அகமது மற்றும் ஏ.எஸ்.ரஹீம் ஆகியோர் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகியவை 20 வது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தன.

திருத்தவரைபின் மூன்றாவது வாசிப்பின் போது பல திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்தார். மூன்றாவது வாசிப்பு திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில் 20 வது திருத்தத்தில் 17வது பிரிவான இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை கோரினர். இரட்டை குடியுரிமை விவகாரத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் பதிவாகின. 





Post a Comment

Recent News

Recent Posts Widget