இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலை மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் எப்படி தோற்றிது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் உருவான கொரோனா தொற்று துருக்கியிருந்து இலங்கைக்கு வந்த உக்ரேனிய விமான குழுவினரால் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவின் இந்த தகவல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் அதனை பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
உக்ரேனிய விமானக் குழுவினர் செப்டம்பர் 11 இல் இலங்கைக்கு வந்தனர். இக்குழுவில் பதினொரு பேர் இருந்தனர். அவர்கள் சீதுவ பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.
விமானக்குழுவினரை சுயதனிமைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல், தனது ஊழியர்களையும் ஹோட்டலிலேயே சுயதனிமைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் விமான ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த குழுவில் உள்ள உக்ரேனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது செப்ரெம்பர் 13 ஆம் திகதி உறுதியானது. அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சுகாதார பகுதியினர் ஏனையவர்களிற்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அந்த ஹோட்டலில் 60 ஊழியர்கள் பணியாற்றினார்கள். இதில் சிலர் வீட்டிலிருந்து கடமையாற்றியுள்ளனர். ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி ஊழியர்களில் ஒரு குழுவினரை, ஹோட்டல் நிர்வாகம் வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளது. அவர்கள் வீட்டிலிருந்து கடமைக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு தினமும் வீட்டுக்கு சென்று வந்தவர்களில் 05 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் செப்டம்பர் 11 முதல் 13 ஆம் திகதி வரை ஹோட்டலில் பணிபுரிந்தனர். இதில் ஹோட்டல் பிரதான சமையல்காரர் மற்றும் சலவை அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
இதேவேளை இலங்கையில் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் வைரஸின் தன்மையிலும் வேறுபாடு கண்டறியப்பட்டது.
சீதுவை ஹோட்டல் ஊழியர்களிற்கும், ஆடைத் தொழிற்சாலையிலுள்ள சிலரிற்கும் இடையிலான தொடர்பு வைரஸ் பரவ காரணமாக அமைந்திருக்கலாம்.
கொரோனா தொற்றிற்கு உள்ளான ஹோட்டல் பணியாளர் ஒருவர் தினமும் சிலாபத்திற்கும், சீதுவைக்கும் இடையில் பொதுப்போக்குவரத்தை பாவித்துள்ளார்.
பிரண்டிக்ஸ் கொத்தணியின் முதல் நோயாளி செப்டம்பர் 21 அன்று அறிகுறிகளை வெளிக்காட்டினார். செப்டம்பர் 16 ஆம் திகதிக்குள் அந்தப் பெண் தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒக்டோபர் 05 ஆம் திகதி பிராண்டிக்ஸ் கொத்தணியின் முதல் தொற்று ஏற்பட்டுள்ளது.
வைரஸின் இரண்டாவது அலை முன்பை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment