Ads (728x90)


அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்  இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் இறையாண்மை, சுயாதிபத்தியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை உறுதிப்படுத்துவதே  எனது விஜயத்தின்  நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நாடு என்று சுட்டிக்காட்டியிருக்கும் மைக் பொம்பியோ, நீதி வழங்கல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவை தொடர்பில்  அரசாங்கம்  அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சட்டத்தின் பிரகாரமே சவேந்திரவுக்கு தடை விதிக்கப்பட்டது. சட்டரீதியாக அந்த தடை சரியானது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலர்  மைக் பொம்பியோ இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிதைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தார்.

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபட்ட பின்னர் மாலைத்தீவு நோக்கி பயணித்துள்ளார்.

மாலைத்தீவிற்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget