கொரோனா தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கிராம மட்ட குழு, பிரதேச மட்ட குழுக்களை வினை திறனாக செயற்படுத்துவதற்கு இன்றைய வடக்கு மாகாண கோவிட் 19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வடக்கு மாகாண கோவிட் 19 செயலணி கூட்டம் ஆளுநர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண கோவிட் 19 பற்றி ஆராயப்பட்டதோடு மாவட்ட நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
யாழ். மாவட்டத்தைப் பொறுத்த வரை 800 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொரோனா தோற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் மிகவும் விழிப்பாக கோவிட் 19 தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வர்த்தமானி அறிவித்தல்களான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் யாழ். மாவட்ட மட்ட குழுக்கள் சுகாதார வழிகாட்டலினை கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
தேவையற்ற ஒன்று கூடுகளை தவிர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒன்று கூடுவதாகவிருந்தால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் போன்றவற்றில் அவர்களுடைய வாகன இலக்கத்தினை வாகனத்தில் உட்புறத்தில் காட்சிப்படுத்தி அதனை மக்கள் புரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வாடகை வாகன சாரதிகள் தாங்கள் பயணிகளை ஏற்றிச்சென்ற விவரங்களை தாங்கள் பெற்று வைத்திருத்தல் அவசியமானது. வெளிமாவட்டங்களுக்கான பயணங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல உணவகங்களில் எடுத்துச் சென்று உண்ணுதல் செயற்பாடு தொடர்பில் சுகாதார நடைமுறை சட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ராஜ கிராமம் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் குருநகர், திருநகர் பகுதிகள் காணப்படுகின்றன.
மேலும் இடர் கால நிவாரணமாக இரண்டு வாரங்களுக்கான நிவாரண உணவு பொதிகள் வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து முதற்கட்டமாக 7 மில்லியன் ரூபாய் கிடைத்திருக்கின்றது. அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றிலிருந்து எடுத்துள்ளோம். அந்த வகையிலே பிரதேச செயலர்களால் அந்த விவரங்களை திரட்டி அதனை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைவிட மாவட்ட செயலகத்தில் தகவல் தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். இங்கு முப்படை சார்ந்தவர்களும் அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் இணைந்த வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய தொடர்பு இலக்கங்கள் 0212117117 இந்த இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment