மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி தாம் தங்கியிருந்த பிரதேசங்களிலிருந்து சென்ற 454 பேர் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் உள்ளிட்ட தங்குமிடங்களிலிருந்து குடும்பமாக அல்லது தனியாக தங்கியிருந்த பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 454 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் தங்கியிருந்த இடங்களிலேயே பிரதேச சுகாதார அதிகாரிகளின் உத்தரவுக்கமைய இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
கடந்த வியாழக்கிழமை காலை முதல், மேல் மாகாணம் மற்றும் குளியாபிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 05 பொலிஸ் பிரிவுகளிலிருந்து இவ்வாறு வேறு இடங்களுக்கு சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சினால் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட கொரோனா தொடர்பான வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, அவர்கள் மீது ரூபா 10,000 அபராதம் அல்லது 06 மாத கடூழிய சிறைத் தண்டனை அல்லது அவை இரண்டு தண்டனைகளும் வழங்க நீதிமன்றத்தினால் முடியும் என அவர் தெரிவித்தார்.
எனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறியவர்கள் தாங்கள் தற்போது தங்கியுள்ள பிரதேசத்திலுள்ள சுகாதார பரிசோதகரை அணுகுமாறு சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது

Post a Comment