கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மிகக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகள் விநியோகம் தொடர்பாக உரிய அக்கறை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் அன்றாட உணவாக பாண் மற்றும் பணிஸ் போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர்.
வெதுப்பகங்களில் இருந்து சைக்கிளிலோ அல்லது முச்சக்கரவண்டிகளிலோ பாணை விற்பனைக்காக கொண்டு செல்பவர்கள் வெறும் கைகளாலேயே பாணை விநியோகிக்கின்றனர்.
மேலும் கடைகளுக்கு பாண் விநியோகம் செய்வோர் பெரும்பாலும் 05 அல்லது 10 இறாத்தல் பாண் வரை கைகளில் அடுக்கி நெஞ்சோடு அணைத்தவாறு அதை கடைகளுக்கு கொடுக்கின்றனர். முச்சக்கரவண்டிகளில் கொண்டு செல்பவர்களும் இதனையே பின்பற்றுகின்றனர்.
இவர்கள் இவ்வாறு செய்யும்போது இருமல், தடிமல், தும்மல் போன்றன அவர்களை அறியாமலேயே வந்து விடுகின்றன. அத்துடன் இவர்களின் கைகள் வாகனத்தின் கைப்பிடி உட்பட பல இடங்களில் அடிக்கடி தொடுகைக்கு உள்ளாகின்றன.
இச்சந்தர்ப்பங்களில் கொரோனா வைரஸ் மட்டுமன்றி ஏனைய பல நோய்க்கிருமிகளும் பொதுமக்களை நேரடியாக தாக்கக்கூடிய அபாயம் உள்ளது.
ஒரு பாண் வெதுப்பகத்தில் உற்பத்தியாக்கப்பட்டு பொதுமக்கள் வாங்கி உட்கொள்வதற்கு இடையே பலரது வெற்றுக்கைகளின் தொடுகைக்கு உட்படுகின்றது. தற்போதைய நிலையில் இது மிகவும் ஆபத்தானது.
எனவே வெதுப்பகத்தில் இருந்து ஒவ்வொரு பாணும் பையில் அடைக்கப்பட்டு விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது வெதுப்பக உரிமையாளர்களுக்கு சற்று சிரமமாக இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி இதனை செயற்படுத்த முன்வரவேண்டும்.
இந்த விடயத்தில் அக்கறை செலுத்துமாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment