கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் இன்று மாலை இடம்பெற்ற சிறப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட – பேலியகொட கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணியை அடுத்து கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் தீவிரமடைந்துள்ளதால் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நாளை திங்கட்கிழமை அதிகாலை 05 மணிக்கு நீக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அது மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment