அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான சகல போக்குவரத்துக்களையும் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பணித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மிக இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவர்களை சொந்த வீடுகளில் தனிமைப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிகரமான முடிவுகளைக் தந்துள்ளன.
இந்த செயல்முறையை மேலும் விரிவுபடுத்தி செயற்படுத்துமாறும், அதை சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வீட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் பி.சி.ஆர் சோதனை 10ஆவது நாளில் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, நோய்த் தொற்று இல்லாதவர்களை 14 நாள்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் -19 நோயைப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

Post a Comment