Ads (728x90)

இந்திய மீனவர்கள் நால்வர் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் உயிர் நீத்த சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் மூவரும், மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மீனவரும் பயணித்த படகு இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டதில் உயிரிழந்த துரதிர்ஷ்ட சம்பவத்தையடுத்து நாம் அதிர்ச்சியடைகின்றோம்.

இச்சம்பவம் தொடர்பாக தமது கடும் எதிர்ப்பை இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு குறித்து தமது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியதோடு, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இரு அரசாங்கங்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வுகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏ.மெசியா (30-வயது), வட்டவாளத்தை சேர்ந்த வி.நாகராஜ் (52-வயது), மண்டபத்தை சேர்ந்த என்.சாம் (28-வயது) மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த எஸ்.செந்தில் குமார் (32-வயது) ஆகியோரே உயிரிழந்த மீனவர்களாவர்.

இதில் சாம் என்பவர் 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget