மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது. நிர்வாகத்தலைவர் ஆங் சாங் சூ கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் வன்முறையை தூண்டியதாக ஆங் சாங் சூ கி மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே வோக்கி டோக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் இராணுவத்தினருக்கு தடைகள் அல்லது இடையூறு விளைவிக்கப்படுமாயின் அவர்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு நகரங்களில் இராணுவத்தினரின் வாகன பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் மீது றப்பர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment