Ads (728x90)

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-சென்னைக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு இடையேயான உள்நாட்டு விமான சேவையை விரைவில் தொடங்கவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மடு தேவாலயத்துக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்காக அமைக்கப்படும் இடைத்தங்கல் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் மடுவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவோடு மன்னாரில் உள்ள மடு தேவாயல மைதானத்தில் இடைத்தங்கல் வீட்டுவசதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்திவிட்டனர். இந்திய உயர் ஸ்தானிகராலயம் மாற்றுத் திட்டமொன்றை இதற்காக பரிந்துரைத்துள்ளது. அதற்கு நாமும் அனுமதியை வழங்கியுள்ளோம்.

இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாவை விரைவில் தொடங்க எதிர்பார்க்கிறோம். யாழ். விமான நிலையத்தின் வளர்ச்சிக்கான இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையேயான நேரடி விமான சேவையை விரைவில் தொடங்க எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget