ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நேற்று அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
புதிய தீர்மானத்திற்கு சபையில் பெரும்பான்மை ஆதரவு இல்லை. இலங்கை இந்த தீர்மானத்தை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் தேர்தல்கள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை எழுப்பியுள்ள கவலைகளையும் அமைச்சர் நிராகரித்தார். இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்ததாகவும், முன்னாள் அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஆவணத்தில் இருந்து திரும்பப் பெறுவதை ஏற்கனவே தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
முன்னைய அரசு தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிது பெரும் துரோகம் என்று கூறிய அவர், எனினும் இலங்கை ஐ.நா. நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்றார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜெனிவா தீர்மானமானது பதினேழரைப் பக்கங்களைக் கொண்டது என்றும், அதில் இரண்டு பக்கங்களில் மாத்திரமே யுத்தம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஏனைய 15 பக்கங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் நாட்டில் இல்லாமல் போன ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் என்பன தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்டு கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, இதற்காகவா மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
நமது நாட்டுக்குள் ஆட்சி முறைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காகவா? மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது லக்ஷ்மன் கிரியெல்லவின் பொறுப்பற்ற கருத்தாகும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்ன, இது குறித்து தனியான விவாதம் ஒன்றைக் கோருங்கள் எனக் குறிப்பிட்டார்.

Post a Comment