Ads (728x90)

”ஆறுகளை பாதுகாப்போம்” (சுரக்கிமு கங்கா) வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து ஆறுகளையும் இவ்வருட இறுதிக்குள் சுத்தம் செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுற்றாடல் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள 103 ஆறுகளை உள்ளடக்கிய வகையில் “சுரக்கிமு கங்கா” வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 2,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி பற்றாக்குறையானால் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன்நிற்காமல் அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சமூக வலைத்தளங்களில் சுற்றாடல் தொடர்பாக கதைக்கும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

இத்தேசிய வேலைத்திட்டம் நேற்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புண்ணிய நகரில் மாணிக்க கங்கைக்கு அருகில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“சுரக்கிமு கங்கா” செயற்திட்டத்தின் பூகோள தகவல் தொழிநுட்ப வழிகாட்டல் கணனி செயலி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பத்து அம்ச கருத்தியலின் அடிப்படையில் பசுமை சுற்றாடல் முகாமைத்துவத்திற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தில் பிரதானமானதாக “சுரக்கிமு கங்கா” நடைமுறைப்படுத்தப்படும். சுற்றாடல் பாதுகாப்பின் பிரதான பகுதியான நீரின் தூய்மையை உறுதி செய்து நீர் வளத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

ஆறுகளை பாதுகாப்பதன் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிதண்ணீரை வழங்குதல், சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுலா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஏனைய நோக்கங்களாகும்.



Post a Comment

Recent News

Recent Posts Widget