சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று ஐந்து மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் வைத்தியசாலைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் நேற்று காலை 07 மணி தொடக்கம் நண்பகல் 12மணி வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இவர்களின் பணி பகிஷ்கரிப்பு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றது.
நோயாளர்களை சிரமத்துக்கு ஆளாக்கும் நோக்கத்துக்காக சுகாதார ஊழியர்கள் போராட்டம் மேற்கொள்ளவில்லை. சுகாதார ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தாதியர்களின் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார துறைக்கு கொராேனா உதவி தொகையாக மாதாந்தம் 7,500 ரூபா வழங்கி வந்தது. தற்போது அந்த தொகையை முற்றாக நீக்கியுள்ளது. அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்துக்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்துள்ளது.
அதேபோன்று விடுமுறை கொடுப்பனவு, சுகாதார சேவையை மூடிய சேவையாக மாற்றவேண்டும். கொவிட் விசேட விடுமுறையில் குறைப்பு செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கி இருக்கின்றோம். அதற்குள் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் தொடர் போராட்டத்துக்கு செல்வோம் என தாதியர்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment