Ads (728x90)

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கும் என்று அதன் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடனான சந்திப்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் அரசு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும், இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி, பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாகவும், அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும் அவர் பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை நாட்டின் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்த்து கொள்ள முடியும் எனவும், அதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget