ஆர்ப்பாட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டநிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
வவுனியாவிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டுக் கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், நீதி கிடைக்கும்வரை போரோடுவோம், நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு? போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்ற முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தினர் இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இவ்விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆரம்பித்து, பெண்கள் வாழ்வுரிமைச் சங்கக் கட்டடத்தில் முடிவடைந்தது. பெண் குலத்தை மதித்து பெண்ணியம் காத்திடு, வேண்டாம் வேண்டாம் பாலியல் துஷ்பிரயோகம் வேண்டாம், பெண்கள் மீதான வன்முறைகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், ஆண் பெண் ஊதிய பாகுபாடு வேண்டாம் என்று விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கிளிநொச்சியில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் டிப்போ சந்தியில் நிறைவுற்றது.
மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?, மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?, அரசே காணாமலாக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? உள்ளடங்களாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து நடைபவனியாகச் சென்று திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாகச் சென்று அங்கும் சுலோகங்களை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது உறவுகளை மீட்டுத்தர ஐ.நா. சபையும், அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பட்டில் ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே ?, புலனாய்வாளர்களைக் கொண்டு எம் மக்களை அச்சுறுத்தாதே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அரசைப் பாரப்படுத்து, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய் போன்ற கோசங்களோடு, இலங்கை அரசே உம்மிடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?, சர்வதேசமே இலங்கை அரசுக்குத் துணை போகாதே, போன்ற வாசகங்களை எந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment