மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகையின் சிலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக பகுதியை வந்தடைந்தது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வுக்கு எதிராகவும், குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் பகுதியில் அமைக்கப்பட்ட உயர் மின் வலு காற்றாடி களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற வீதிகள் தரமற்றதாக காணப்படுகின்றமை குறித்தும், போதைப்பொருள் கடத்தலின் தளமாக மன்னாரை மாற்றி மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களுக்கு குறித்த நடவடிக்கைகளின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், நகர சபை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் பின்னர் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
Post a Comment